Saturday, January 31, 2009

எல்லாம் அவள்/அவன் தான்!

நம்மில் மேலான ஒரு தெய்வம் உண்டென்று
கொண்டு காணும் இடமெலாம் அவன் வாழும்
இடம் என்று கண்டு; நுகரும் காற்றேலாம் அவன்
சுவாசமெனும் தெளிவுற்று வாழும் உயிரெலாம்
அவனுடை உயிரென எண்ணி உளம் களிப்பெய்தி
இன்புற்று மகிழ்வோடு வாழி நீ மனமே!



கண்ணின் ஒளியில் உலகின் உயிரெலாம் மகிழ்ந்து
வாழ வழி செய்யும் தாயே!
நின் மலர்ப் பாதம் பற்றி வணங்கி வாழும்
இவ்வேழை கேட்கும் வரமெலாம் தந்து
இவ்வையம் இன்புற அருள் செய் தேவி!

பயிரெலாம் காணும் இடமெலாம் வளர்ந்து
நிறைக்கும் நிலத்திடை வற்றாத நதி வெள்ளம்
பாய்ந்து பெருகி நகரினுள் மக்களெலாம்
பிரிவின்றி அன்போடு இன்பத்து நிறைவோடு
தம் மக்கள் குழாமோடு கலந்து மகிழ்ந்து
வாழ வேண்டும் அம்மா நின் அருளாலே!


ஆக்கமும் போற்றலும் பெருகி நின்றங்கு
உள்ள உயிரெலாம் இன்புற்று வாழ வழி செய்திட
என்னை கருவியாக்கு இறைவா!

!!
!!
!!

காதலியின் கடைக்கண்

நினைவில் நின்ற மலர்விழி பெண்ணின்
இருகரம் பற்றி அவள் இதழிடை என்
உள்ளத்தாமரை மலர இதழ் குவித்து
நெஞ்சில் சாய்ந்து இன்புற்று மகிழ
எண்ணும் மனமே! உன் எண்ணக்
கருத்தை அவள் உள்ளம் ஏற்கும்
வண்ணம் எடுத்தியம்பும் வண்ணக்
கவிதை ஒன்றை வரைந்திட
துணை செய்வாயா?


கண்ணோடு நோக்கி!
உள்ளத்தொடு கலந்து!
நினைவோடு வாழ்ந்து!
உடலோடு மறைந்தோம்.

Tuesday, January 13, 2009

தற்பெருமை!

மனிதன் தன்னைப் பற்றி பெருமிதமாக நினைப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் தான் தான் உயர்ந்தவன் என்னும் மனப்போக்கு அவனைப் படுகுழியில் தள்ளி விடும்.

தன்னைப் பற்றி மிகவும் சிறப்பாக மற்றவர்கள் பொய்யானச் செய்திகளை சொல்லும் போதும் அதை கேட்டு மிகவும் மகிழ்தல் ஆனது ஆனைத் தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுகொண்டதைப் போலாகும்.

நமக்கு எழுத தெரியும், எழுத இடம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக மனதில் நினைப்பதை எல்லாம் எழுதி இணையத்தில் விட்டால் நம்மையும் நம் சுற்றத்தாரையும் பற்றி நிச்சயம் பெரும்பாலானவர்கள் நல்ல விதத்தில் நினைக்க வாய்ப்பில்லை.

இணையத்தில் வரும் செய்திகளுக்கு கமெண்ட் எழுதுகிறேன் என்று மிகக் கீழான
சொற்களை எழுதுபவரின் மன அழுக்கு உலகில் எல்லோருக்கும் படம் பிடித்தது போல் தெரிந்து விடுகிறது.

அடுத்தவரை மிகவும் தாழ்வாக நினைப்பதும் பிறரிடம் இருந்து தனக்கு ஏதாவது தேவைப் படுகிறது என்றக் காரணத்திற்காக அவரைப் பற்றி மிகப் பெருமையாக இல்லாத விசயங்களை சொல்லி தலையில் தூக்கி வைத்து ஆடுவதும் மனிதனை
மேலான நிலைக்கு கொண்டு செல்லாது.

எல்லோரோடும் அன்போடு பழகுவோம். இணையத்தில் உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தவிர்ப்போம். இல்லையேல் நாளை சமுதாயம் நாம் உண்மையாக செய்து இருப்பதையும் பொய் என்றே நினைத்து நம்மை இகலும்.